Sunday, July 29, 2007

பூ உதிர் காலமோ

உன் பாதம்
மண் சேர கூடாதன
மரம் பூ சொரிய
அட,இது தான்
பூ உதிர் காலமோ!!!


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என் இதயமும் கருவறை தான்
நீ
கொலு வீற்றிருப்பதால்

கணக்கில நாங்கெல்லாம் புலி(ளி)ல

என்னடா இவன் புதுசா சொல்லப் போறான்னு நினைக்கிறீங்களா? ஓன்னும் இல்லைங்க.

இது என்னோட விடலை பருவ காலம்ங்க. இது மத்தவங்க மாதிரி வித்தியாசமா இருக்காதுங்க. முதல்ல என்னோட விடலைப்பருவ ப்ளாஷ்பேக். நான் ஸ்கூல் ல பெரிய படிப்ஸ் கிடையாதுங்க. விளையாட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். அது என்னவோ தெரியல தெருவுல கிரிக்கெட் டீம் காப்டனா இருந்தாலும் ஸ்கூல் லெவல் ல நான் ஒரு உப்புக்கு சப்பானி. வாத்தியாருக்கெல்லாம் என்னைய பார்த்தா ஒரு தனி சந்தோஷம், பின்ன திட்ட ஆள் கிடைச்சா சும்மாவா. வீட்டில என்ன கோபம் இருந்தாலும் நம்ம தான் அவங்களுக்கு வடிகால். சும்மா விரட்டு விரட்டு னு விரட்டுவாங்க. நாமெல்லாம் இதுக்கு பயப்படுற ஆளா? போங்கப்பா திருத்தறதுக்கு வேற நல்ல ஆளா பிடிங்கன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.

ஆனா என்னையே நான் அடிக்கடி கேட்டுக்கிற கேள்விங்க, எனக்கு அப்பெல்லாம் தெரிஞ்சது ஸ்கூல்(சும்மா இஷ்டமில்லாம போனது), வீடு, டியூசன் சென்டர்... இவ்வளவு தான். ஆனாலும் நான் சரியா படிக்கலங்கிறது எனக்கு ஏதும் புரியாத விஷயம்.

இப்படி இருந்த நேரத்தில +2 ல மிட்டேர்ம் எக்ஸாம்கங்கிற பேர்ல அடிக்கடி எக்ஸாம் வச்சு தொல்லை பன்னுவானுங்க. நமக்கு பரிட்சைனாலே வயித்துல புளிய கரைக்க ஆரம்பிச்சுடும், ஏன்னா படிக்கனும்ல. என் மேல கணக்கு வாத்தியாருக்கு ஒரு இனம் புரியாத பாசம்.
ஏன்னா எங்க அண்ணன ரொம்ப பிடிக்கும், அவன் நல்லா படிச்சா பிறகு பிடிக்காதா? நமக்கு அதுவே பிரச்சனை. சும்மா எதுக்கெடுத்தாலும் உங்க அண்ணன் எப்படி படிச்சான்னு கேட்டே நமக்கு இம்சைய கூட்டுவானுங்க. அன்னைக்கு பார்த்து கணக்கு பரிட்சை, நம்ம தான் எல்லாம் மறந்திடுற கேஸ் ஆச்சே...பரிட்சைங்கிறதே மறந்து போய் ஸ்கூல்க்கு போனா பரிட்சைக்கு எல்லாரும் படிக்கிறானுங்க. அடப்பாவிகளா நமக்கு யாராவது சகலை கிடைப்பானானு பார்த்தா ஒருத்தரும் இல்லை. அன்னைக்கின்னு பார்த்து முத க்ளாஸே கணக்கு, விளங்கி போயிடும்டீனு நினைச்சிட்டு எக்ஸாம் எழுத உக்கார்ந்திட்டேன்.


கேள்வி தாள பார்த்ததுமே தெரிஞ்சு போயிடுச்சு வச்சுடாங்கடா ஆப்புனு. ரொம்ப நேரம் டைம் பார்த்துட்டே எழுதினேன், என்னடா இவன் படிக்கலைன்னு சொல்லிட்டு பரிட்சை எழுதுறானேனு தான யோசிக்கிறீங்க அதாங்க இல்ல நானும் எவ்வளவு நேரம் தான் எழுதுற மாதிரி நடிக்கிறது, பெல் எப்ப அடிப்பாங்கன்னு தான் டைம் பார்த்தேன். வெத்து தாள கொடுக்க வேண்டாம்னு நினைச்சு சும்மா கிறுக்கி கொடுத்திட்டேன்.


சுமாரா 5 நாள் கழிச்சு திருத்தின பேப்பர கொடுத்தாங்க, எனக்கு அன்னைக்கு கொடுக்கல. வாத்தியார் ரெண்டு பேருக்கு பேப்பர கொடுக்காம புதிர் போட்டுட்டு போய்ட்டார். என்ன புதிர்னா ரெண்டுல ஒருத்தர் முட்டை னு சொல்லிட்டார். என்னோட க்ளாஸ்மேட்டுக்கு அல்லு கழண்டு போய் அழாத குறைதான். கவலபடாத அடுத்த பரிட்சையில பார்த்துடலாம் சொல்லி சமாதானம் படுத்தினேன்.
அடுத்த நாள் வாத்தியார் பேப்பர் கொடுத்தார் பார்த்தா நாம் தான் அந்த முட்ட மார்க். என் க்ளாஸ்மேட் என்ன ஒரு லுக் விட்டுட்டு போய் உக்கார்ந்துட்டான். நம்ம மேல தான் வாத்தியாருக்கு ரொம்ப பிரியமாச்சே, க்ளாஸ் முன்ன நிக்க வச்சு என் அண்ணன் எப்படி படிச்சாங்கிறது சொல்லி என்ன அசிங்கப்படுத்த ஆரம்பிச்சிட்டார். ஏனோ அன்னைக்கு அது பெரிசா தெரியல....ஆனா இன்னைக்கு நினைச்சா நம்மல அசிங்கப்படுத்திட்டாங்களோ ன்னு தோனும்.

இதுல என்ன ஆச்சர்யம் அப்படின்னு கேட்கிறீங்க பின்ன நான் கடைசியும் முதலுமா வாங்கின முட்டை அதுங்க....அதுக்கு அப்புறம் படிக்க ஆரம்பிச்சிருப்பேன்னு நினைச்சிடாதீங்க எப்பாடு பட்டாவது >0 எடுத்துரோம்ல.......


Saturday, July 28, 2007

பிரதீபா பாட்டீல்

வாழ்த்துக்கள்.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி. இந்த பெருமைக்குரிய விஷயம் இந்தியா சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழித்து நடந்தேறியுள்ளது என்று என்னும் போது சற்று வருத்தமாக தான் உள்ளது.

72 வயது ஆகும் பிரதீபா பாட்டீல் மும்பை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர், ராஜஸ்தானின் முதல் பெண் கவர்னர் அரசியலும் இவருக்கு ரொம்ப பரிச்சயம்.

ஜனாதிபதி பதவி இந்தியாவின் மிகப் பெரிய பதவி. காங்கிரஸ் உதவியுடன் பதவியேற்றிருக்கும் பிரதீபா கட்சி பாராமல், இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செலுத்தும் விதமாக சேவை செய்யவே அனைத்து மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.பிரதீபா அதை நிறைவேற்றுவார் என்றே நம்புவோமாக.....

பின் குறிப்பு : இரண்டு நாட்கள் முன்னே எழுத நினைத்து நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் இன்று எழுதியுள்ளேன்...



பிரதீபா கட்டாயம் இதை நிறைவேற்றுவார் என்று எதிர்ப்பார்ப்போம்.

Tuesday, July 24, 2007

இது ஒரு மொக்கையா ?

மொக்கை - இந்த வார்த்தைய ரெண்டு மூனு வருஷமா அடிக்கடி நான் கேக்கிற வார்த்தை. அது எப்படினா நான் ரொம்ப பேசுறேன்னு என்னோட நண்பர்கள் சொல்லுவாங்க...கொஞ்ச காலத்துக்கு முன்னால...என்னைய மொக்கைன்னு சொல்ல ஆரம்பிச்சானுங்க. அட இது என்னடா புது பட்டமால இருக்குன்னு காலர தூக்கி விட்டா அதுக்கு அப்புறமால தெரிஞ்சது நம்மல கிண்டல் பன்றானுங்கன்னு. இதுக்கு அப்புறமாவது மொக்கை போடுறத நிறுத்திறுவேன்னு நினைச்சானுங்க...விடுவோம நம்ம, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்பாய்ங்க.

சரி. முதல்ல மொக்கைனா என்ன? ரொம்ப நேரம் வெட்டியா பேசுறதா? இல்ல பெரிய உருவமா (என் நண்பன் ஒருத்தன் அவன் நண்பன அப்படித்தான் கூப்பிடுவான்)? அட இதுக்கு என்ன தான் அர்த்தம். அர்த்தம் தெரிஞ்சவங்க கொஞசம் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.

சொல்ல வந்தத சொல்லிறேன், சில நாள் இந்த மொக்கை பிரச்சனை எனக்குன்னு வந்து தொலைக்கும். எப்படினு நீங்க கேக்கிறது எனக்கு கேக்குது. என்னோட அறைத்தோழர் ஒருத்தர் மொக்கை போடுறதுல்ல கில்லாடி. எவனாவது சிக்குறானன்னு பார்ப்பார். சிக்கிட்டா சிதைஞ்சான். மனுசர் எம்.ஜி.ஆர் ல ஆரம்பிச்சு சூர்யா ஜோதிகா கல்யானம் வரைக்கும் சினிமா நியூஸ் பத்தி பேசுவார். இதோடு விடுவார்னு பார்த்தா அண்ணா விலிருந்து ஜெயலலிதா வரைக்கும் பேசுவார். நடுவுல நம்ம யாருக்கு ஓட்டு போட்டோ ம்னு கேட்டு அதுக்கும் திட்டு விழும். இது கொஞ்சம் சூடா வார்த்தைகள் வந்து விழுந்துரும், ஒரு வழியா அட சாமி விடப்பான்னு சொல்லிட்டு தூங்கப் போனா அடுத்த நாள் காலையில எந்திருச்சு நேத்து நீ அப்படி பேசி இருக்க கூடாதுன்னு திரும்ப ஆரம்பிப்பாரு பாருங்க...இது என்னப்பா ராத்திரி பூரா உக்காந்து யோசிப்பாய்ங்களோ???? இதுக்கு எல்லாம் பயந்து தான் நாமெலும் மொக்கைய போட ஆரம்பிச்சாத்தான் பொழைக்கமுடியும்னு முடிவு கட்டி ஆரம்பிச்சாச்சு.

இப்படி நான் மாறின பிறகும் என்னை நிம்மதியா வாழ விடலையே இந்த மொக்கை. ஒரு நாள் நான் ரொம்ப பிஸியா வேலை பார்த்துட்டு இருந்தேன்(நாமலே என்னைக்காவது ஒரு நாள் தான் அப்படி இருப்போம்). அன்னைக்குன்னு பார்த்து ஒரு செல்பேசியில ஒரு அழைப்பு. செல்பேசிங்கிறது MOBILE PHONE க்கு ஏற்ற தமிழ்ச்சொல்லா? இந்த மொக்கையப்பத்தி பின்னால பேசிக்குவோம். என்னடா இவன்கிட்ட இருந்து புதுசா கால் வருதேன்னு பார்த்தா, பேசுறான் பேசுறான் பேசிக்கிட்டே இருக்கான். நான் ரொம்ப டயர்டாகி மணிரத்னம் படத்தில வர்ற மாதிரி ஒத்த வார்த்தை பதில் சொல்ல ஆரம்பிச்சேன். அவன் என்ன நினைச்சானோ தெரியல, டேய் மச்சான் சரியான போர்டா, மொக்கை போடுறதுக்கு ஆள் தேடினேன் நீ தாண்டா கிடைச்சேனு தாங்ஸ் சொல்லி கால்ல கட் பன்னிட்டான். அவன் வச்சப்பிறகு என் காத கொண்டு போய் ஒரு ENT SPECIALIST கிட்ட காட்டவேண்டியது இருந்தது.

என்னடா எங்க பார்த்தாலும் மொக்கை, சரி டிவி ய பார்ப்போம்னு பார்த்தா, வடிவேலு சரத்குமார் நடிச்ச படம் போய்க்கிட்டு இருந்தது. சரி பார்க்கலாம்னு பார்த்தா வடிவேலு பேரு மொக்கச்சாமியாம். மொக்கை மொக்கைன்னு டிவி பக்கம் போனா அங்க ஒரு மொக்கை திங்கு திங்குன்னு ஆடுதாம். விடுங்கப்பா என்னை.

இத எல்லாத்தையும் அனுபவிச்சப் பிறகு எல்லா இடத்திலயும் மொக்கை இருக்குடா நாமத்தான் பார்த்து பதவிசா நடந்துக்கனும்னு நினைச்சேன். பின்ன எங்க தான் மொக்கை இல்ல கல்யானம் நிச்சயம் பன்னவங்க என்ன பேசுறதுன்னு தெரியாம phone ல மொக்கை போடுறாங்க. காலேஜ் போனா வாத்தியார் மொக்கை போடுறார். ஆபீஸ் போனா மீட்டிங்கிற பேர்ல மொக்கை போடுறானுங்க. தூங்கலாம்னு பார்த்தா கனவுல வந்து மொக்கை போடுறானுங்க. சரி நிம்மதியான இடம்னு நம்ம இனையம் பக்கம் வந்தா அங்கையும் மொக்கை போடுறதுக்கு போட்டி வைக்கிறாங்க...

இந்த மொக்கை நம்மல விடாது போல இருக்கே...................

Sunday, July 22, 2007

அழைப்பு

உன்
திருமணத்திற்கு அழைத்தாய்
அழைக்காமல் வந்தது
நீர் கண்ணில்......



சிரித்தாய்
சிதறியதவென்னவொ
நான்

கிரீடம் விமர்சனம்

அஜித் அணியும் கிரீடம் என்ற டைட்டிலோடு வந்திருக்கும் படம் கிரீடம்.

ராஜராஜன்(ராஜ்கிரன்) ஒரு கடமை தவறாத Head Constable. அவரது மகனான சக்திவேலுவை(அஜித்) SI ஆக்க வேண்டும் என்பதே அவரது ஒரே கனவு. இதனிடையே அஜித் திரிஷாவுடன் காதல், கல்யானம் வரை செல்கிறது. கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ராஜ்கிரன்க்கு பிரச்சனை வேண்டாமா? உள்ளூர் MLA மகனிடம் தகராறு செய்ய வேதாரண்யத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அங்கும் இவரது கடமை வில்லனோடு மோத வைக்க, அப்பாவை காப்பாற்ற அஜித் வில்லனை அடித்து உதைத்து விடுகிறார். இதன் பிறகு அஜித் என்ன ஆனார்? ராஜ்கிரன் கனவு நிறைவேறியதா? அஜித் திரிஷா காதல் நிறைவேறியதா? என்பதே கிளைமேக்ஸ்.

அஜித், ராஜ்கிரன் இடையே உள்ள பாச உணர்வு நன்றாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல் பாதி காதல், பாசம், காமெடி ன்னு படம் போகுது. அஜித் திரிஷா காதல் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. முதல் பாதி அலுப்பில்லாமல், சிரிப்புடனே நகர சந்தானம், விவேக்,அஜித்,திரிஷா guarantee. விவேக் சற்று கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள விட சந்தானம் காமெடி சூப்பர்.

அஜித் இளமையான அழகான ஹீரோவாக தெரிகிறார். திரு கொஞ்சம் க்ளோஸ் அப் தவிர்த்திருக்கலாம். அஜித்தின் நடிப்பு கவனிக்கப்பட வேண்டிய ஓன்று. முகவரி, வரலாறு வரிசையில் கிரீடம் சேரும் என்பதில் சந்தேகமில்லை.திரிஷாவுடனான ரொமான்ஸ், ராஜ்கிரன் உடனான பாசப்பினைப்பு, வில்லனுடனான மோதல் அஜித் எதையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக climax அஜித் அவரது ஆக்ரோஷத்தை அவரது கண்ணிலும், உடல் அசைவிலும் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜ்கிரன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. அஜித் ராஜ்கிரன் இருவருமிடையே பாசப்போராட்டத்தில் கிளப்பியிருக்கிறார். இந்த வேடத்திற்கு ராஜ்கிரன் மிகப் பொருத்தம். மனுசர் வாழ்ந்திருக்கிறார். முக்கியமாக climax ல் அஜித்திடம் பேசும் காட்சியில் கலக்கி எடுத்திருக்கிறார்.

திரிஷா கல்லூரி மானவியாக வலம் வருகிறார். திரிஷாவும் தன் பங்குக்கு நடித்திருக்கிறார். அஜித் திரிஷா இடையே நல்ல ஒரு வேதியல்(அதாங்க Chemistry) தெரிகிறது.

முதல் பாதி கலகலவென செல்வதில் திரிஷாவிற்கும் பங்கு உள்ளது.

சந்தானம் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்ப்படுத்தியிருக்கிறார். விவேக் கொஞ்சம் அசைவத்த குறைங்க.

வில்லனாக புதுமுகம், வித்தியாசமாக ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு எதாவது Dialogue கொடுத்திருக்கலாம், கத்தியே உசுர வாங்கிட்டார்.

இசை GV பிரகாஷ் அக்கம் பக்கம், கனவோடு பாடல்கள் கேட்கும்படி உள்ளது. Background music ல அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.

சன்டைக்காட்சிகள் இயல்பாக வந்திருப்பது இன்னொரு சிறப்பு.

Camera திரு தன் வேலையை மிகச்சிறப்பாக செய்துள்ளார். முக்கியமாக அக்கம் பக்கம் பாடல் காட்சி சூப்பர்.

இடைவேளைக்கு பிறகு படம் மெதுவாக செல்வதை போல ஒரு உணர்வு.

சரண்யா,ஹனிபா, மனோபாலா, பாஸ்கர் பலர் நடித்துள்ளனர்.

விஜய் முதல் படம் நன்றாக செய்துள்ளார். இடைவேளைக்கு பிறகு ஏற்பட்ட தொய்வை தவிர்த்திருக்கலாம்.

இதையும் மீறி கதையில் தென்படும் சறுக்கல்கள் வில்லன் அவ்வளவு அட்டகாசம் செய்யும் போது போலீஸ் சும்மா இருப்பது(Encounter ல போட்டு தள்ள வேண்டாமா).அஜித் போலீஸ் வேலைக்கு try பன்றாருன்னு ராஜ்கிரன் தான் சொல்றாரே தவிர பாதி நேரம் அஜித் ஒன்னும் செய்யல.

வழக்கமான கதையானாலும் இயல்பான சண்டைக்காட்சி, அஜித் மற்றும் ராஜ்கிரனின் நடிப்பு, Climax காட்சி இதுக்காக படம் பார்க்கலாங்க.

அஜித்திற்கு இப்படம் ஒரு கிரீடம் தான்.

Friday, July 20, 2007

+2 மார்க்

நான் +2 முடித்த வேளை அது. பெரிசாக மார்க் வாங்கவில்லை என்றாலும் பாசஸானதே பெரிய விஷயமாக பட்டது. மார்க் ஷீட் வாங்கியதுமே தெரிந்துவிட்டது இன்று வீட்டில் தீபாவளி.

வீட்டிற்குள் நுழைந்ததுமே சோகத்தில் இருப்பவனாய் காண்பிச்சுக்க எதோ feelings ஓட இருக்கிற மாதிரி பொத்தென பெட்ல விழுந்துவிட்டேன். சாப்பிட கூப்பிட்ட அண்ணனிடம் சாப்பாடு வேண்டாம் என்று அடம் வேறு. உண்மையை சொல்லனும்னா அன்னைக்கு சரியான பசி. கூப்பிட்ட நேரத்தில் சாப்பிட போனால் நம்ம acting என்ன ஆகிறது. (character ஆ மாறிடோம்ல). அப்புறம் என்ன பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கொஞ்ம் போல அண்டா சோறு சாப்பிட்டத மறக்க முடியாது.

கல்லூரியில் சேர வேண்டிய நேரமும் வந்தது, என் அப்பா தான் படித்த கல்லூரியில் என்னை சேர்க்க தன்னால் ஆன முயற்சியில் ஈடுப்பட்டார். எப்படி னு கேக்கிறீங்களா முன்னாள் கல்லூரி முதல்வர் மூலம் சிபாரிசு பெற்றுக்கொண்டார். என் அண்ணன் தன் பங்கிற்கு application form வாங்கிட்டு வந்தான். நான என்ன செய்து கொண்டிருந்தேனு நீங்க கேக்கிறது எனக்கு கேக்குது, நான் தான் இன்னும் character அ விட்டு வெளியே வரலையே :)

வீட்ல ஒரு வட்ட மேசை மாநாட்டுல எனக்கு பல advice எத பத்தினு கேக்கிறீங்களா, நான் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கனும்னு அவரவர்க்கு தெரிந்ததை சொன்னாங்க. நான் கொஞ்சம் யோசித்து physics என்றேன். நான் அதிகமா மார்க் எடுத்தது அதில தான் பின்ன அதில தாங்க படம் போட்டு aim apparatus procedure எழுதினா பாதி மார்க் போடுவாங்க. வேற எதாவது எடுத்து படிச்சா semester க்கு semester நமக்கு தீபாவளி. நமக்கும் feeling ஆகிற மாதிரி ஓரே character பன்னா போர் அடிச்சிறாது. அதான் future அ மனசில வச்சிட்டு சும்மா physics னு சொல்லிட்டேன்.

கடைசியில நான் physics படிக்கறதுன்னு முடிவாயிடுச்சு. எங்க அப்பா இன்னும் ஒரு படி மேல போய் recommendation வாங்க physics HOD அ பார்க்க கூட்டிட்டு போனாரு. அங்க போனா என் மார்க் ஷிட்ட பார்த்துட்டு ஒரு லுக் விட்டார் பாருங்க. அந்த பார்வையில இவனெல்லாம் படிச்சி என்ன கிழிக்க போறான்னு ங்கிற மாதிரி ஒரு அர்த்தம் என் சிறு மூளையில பட்டுச்சு. ரொம்ப கம்மியா மார்க் எடுத்திருக்கானேன்னு அவர் சொல்ல எங்க அப்பாவுக்கு temperature ஏறியத நான் பார்க்காத மாதிரி இருந்தத யாரும் பார்க்கல. சரி ஒரு வழியா HOD டிரை பன்றேன்னு சொல்லிட்டார். எங்க அப்பா வீட்டுக்கு வந்ததும் தீபாவளி மாதிரி இல்லைனாலும் கார்த்திக தீபம் அளவுக்கு அர்ச்சனை கிடைச்சது.

ஒரு வழியா interview க்கு லெட்டர் வந்ததுமே எனக்கு நிம்மதியே வந்தது. அப்பாவுடன் interview போகும் போதே எதோ நடக்க போகுதுன்னு தோனிச்சு. அங்க போனா interview la newtons lawலாம் கேக்கிறானுங்கன்னு மத்த பசங்க சொன்னாங்க. எனக்கு ABCD யே மறந்துப் போச்சே. இதுல newton veraya. எனக்கு தெரிஞ்சது 3rd law மட்டும் தான்.அது என்னமோ எனக்கு நடக்க போற interview ல (action) வீட்ல தீபாவளி(reaction) யா தெரிய போறது உறுதி ஆயிடுச்சு. சரி நாம தான் பிரச்சனையை போர்வையா தூங்கிற ஜாதியாச்செ. interview ல என்ன நினைச்சாங்களோ நம்மக்கிட்ட ஒன்னும் கேக்கல. நான் எடுத்த மார்க்கிற்கு இதுவே too much னு நினைச்சிருப்பாய்ங்களோ. இன்னைக்கு தீபாவளி இல்லங்கிறது மட்டும் உறுதியாயிடுச்சு. ஒரு வழியா நாமேலும் college ல சேர்ந்துடோம்ல. இன்டர்வியூ முடிஞ்சு வெளியே வரும் போது HOD அ பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டு வர போனா, அங்க அவரு எங்க அப்பாக்கிட்ட உங்க முகத்துக்காக சீட் கொடுத்தேனு ஊசி வெடிய பத்த வைச்சிட்டார்.

அப்பாடா காலேஜ் ல சேர்ந்தாச்சு, இனி பிரச்சனை ஒன்னும் கிடையாதுன்னு சந்தோசமா காலேஜ் போனேன். அங்க முத மூனுநாளு BRIDGE COURSE நடத்துவானுங்க. அது என்னன்னா ஆங்கில பள்ளி மாணவர்களையும், தமிழ் பள்ளி மாணவர்களையும் சேர்த்து வச்சு பாலம் கட்டுவாங்கலாம். மூனு நாளும் ENGLISH தான். ஒன்னும் செய்ய முடியாது. English புரபோசர் வந்தார், வந்து bridge course னா என்னன்னு சொல்லிட்டு எங்கல அறிமுக படுத்திக்க சொன்னார். அறிமுக படுத்தும் போது மார்க் கையும் சொல்லனுமாம். என்னோட முதல் Co Ed க்ளாஸ்ல அசிங்கப்பட கூடதுன்னு நினைச்சு பந்தாவா 960 மார்க்னு சொல்லிட்டு மானத்த காப்பாத்தின சந்தோஷத்தில உக்கார்ந்துட்டேன்.
பொண்ணுங்க ஒவ்வொன்னா எந்துச்சு மார்க் சொல்ல ஆரம்பிச்சுதுங்க. ஒரு பொண்ணு 650 னு சொன்னதுமே யாரோ மண்டையில சொட்டுனு கொட்டின மாதிரி ஒரு feeling. அந்த HOD எனக்கு ஊசி வெடிய போட்டுட்டு என்ன விட கம்மியா மார்க எடுத்த பொண்ணுங்களுக்கு சீட் கொடுத்திருக்கிறார்.

அன்னைக்கு நான் கொளுத்தினேனுங்க வெடி வீட்ல....

பின்னால அந்த HOD அப்படிதானுன்னு தெரிஞ்சிடுச்சு. சரி அதுக்கு என்ன செய்ய முடியும். ஆனா இன்னைக்கு நினைச்சாலும் நான் எடுத்த மார்க்க நினைச்சா நானெல்லாம் படிச்சு பொழைக்க வந்தது அவரால தானோன்னு நினைக்க தோனுது

(பி.கு. நான் எடுத்த மார்க சொல்ல மறந்துட்டேன்ல, 960 மார்க் குங்க :) முன்னாலயே சொன்னோம்ல நாங்கெல்லாம் character ஆ மாறிட்டோம்னா....)

Thursday, July 19, 2007

எனக்கு நீ

தென்றல்
காரிருள்
மழை
செவ்வானம்
மஞ்சள் வெயில்
இவை எல்லாம் எனக்கு நீ

Monday, July 16, 2007

சிவாஜி விமர்சனம்

1 1/2 வருட உழைப்பு...

ஏவிஎம், ரஜினி, ஷங்கர், ஏஆர் ரகுமான் மிக பெரிய கூட்டனி

இப்படி பல எதிர்பார்ப்பின் இடையே நானும் ஒருத்தனாய் போய் திரையரங்கினுள் அமர்ந்தேன்.

சரி. முதல்ல கதைய பார்த்துருவோம் அப்புறம் மத்தத பேசலாம்...

US ல சம்பாதிச்சு நம்ம ஊர்ல உள்ள ஏழை மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ வசதி கொடுக்கும் நோக்கத்தோடு தாயகம் வருகிறார் சிவாஜி (ரஜினிகாந்த்). இங்க பல கல்வி நிறுவனங்கள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வரும் ஆதிசேஷன் என்கிற ஆதி (சுமன்) இந்த திட்டத்த நடத்த விடாம சதி செய்ய ஆரம்பிகிறார். இங்க ஆரம்பமாகிறது மோதல்.

சிவாஜி பல்கலைக்கழக விஷயமாக அரசாங்க அதிகாரிகளை போய் பார்க்க அங்கு லஞ்சம் எட்டி பார்க்கிறது. சரி. எடுத்த காரியத்தை முடிக்காமல் விட கூடாதுன்னு நினைச்சு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிச்சு சிவாஜி பல்கலைக்கழகம் கட்ட ஆரம்பிக்கிறார். இத பார்த்து கோபம் கொண்ட ஆதி அரசாங்கத்தை மாற்றி சிவாஜிக்கு மீண்டும் தொல்லை தருகிறார். சிவாஜி வேறு வழியில்லாமல் கோர்ட் படியேற, அங்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்த குற்றத்திற்காக சிவாஜி பல்கழைக்கழகத்தை அரசாங்கம் தடை செய்கிறது. கையில் இருந்த பனம் அத்தனையும் கரைந்து நிற்கும் சிவாஜியிடம் ஆதி ஒரு ரூபாய் பிச்சை கொடுத்து பிழைத்து கொள் என்று கூறி செல்கிறார். கையில் ஓரு ரூபாய் என்ன செய்யப்போகிறார் சிவாஜி???? இடைவேளை.

அப்புறமென்ன ஒத்த ருபாய வச்சு எப்படி தான் நினைச்சத செய்தார்ங்கிறது மீதிக்கதை....

என்ன ஒத்த ரூபா கதைக்கு ஆயிரம் ரூபா ரேஞ்சுக்கு பில்டப்பா னு நீங்க கேக்கலாம் ஆனா இதுக்கு ஒரே பதில் ரஜினி இருக்கிறார்ல அப்புறம் என்ன. கறுப்பு பணத்தால எவ்வளவு சீரழிவு ன்னு சொல்லியும் இருக்காங்க...

படத்துல எங்க பார்த்தாலும் ரஜினி இருக்கார்.

தமிழ்ச்செல்வியாக ஸ்ரேயா,மறக்கலாம என்ன. ரஜினி முதல் பாதியில் தமிழ்ச்செல்விய சுத்தி சுத்தி வந்து ரொமான்ஸ் செய்றேன்னு கடுப்பேத்துகிறார். எப்படி பட்ட பிரச்சினை வந்தாலும் அடுத்த சீன்ல ரஜினி ஸ்ரேயாக்கிட்ட ரொமான்ஸ் பன்ன போய்டுவார். அப்புறம் என்ன வெளிநாட்டுக்கு போய் டான்ஸ் ஆடிட்டு வந்துறுவார். ஆனா என்ன சொன்னாலும் அந்த ஸ்ரேயா பொண்ணுஅழகு தாங்க. உடம்ப வில்லா வழைச்சு டான்ஸ் ஆடுது அந்த பொண்ணு.

தாய்மாமன், தமிழ் சினிமாவுல காமெடி பன்றதுக்குன்னு ஒரு உறவு(கிழக்கு சீமையில விதிவிலக்கு). எப்ப இத நிறுத்த போறாங்கன்னு தெரியல. என்ன பார்க்கிறீங்க இந்த படத்தில வேற யாருமில்ல நம்ம விவேக் தான் ரஜினிக்கு மாமா. நான் காமெடி கீமெடி பன்னல சத்தியமா விவேக் தான் ரஜினியோட மாமா.. இதுல வேற ரஜினி விவேக்க மாமான்னு கூப்பிடும் போது அட என்னங்கப்பா இது எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை ன்னு கேக்க தோனுது....

வில்லன் சுமன், இந்த காரெக்டருக்கு சத்யராஜ கேட்டதாக செய்தி. சத்யராஜ் தப்பிச்சார். கஞ்சி போட்ட வேட்டி சட்ட போட்டுக்கிட்டு சுமன் எதாவது பன்னுவாரான்னு பார்த்தா தண்ணீயில போட்ட சட்ட மாதிரி ஒன்னும் செய்யாம பொசுக்கின்னு இருக்கார். இந்த வில்லனுக்கா ரஜினி இவ்வளவு தூரம் கஷ்டப்படனும்...மூனு மணி நேரம் படம் எடுக்கனும்ல... . RULING PARTY அ மாத்திற அளவுக்கு பவர்புல் வில்லன் ரஜினியிடம் சர்க்கஸ் கோமாளியாய் நிற்கும் போது சிப்பு தான் வருது.

அப்புறம் மணிவன்னன், வடிவுக்கரசி, பட்டிமன்றம் புகழ் ராஜா, சாலமன் பாப்பையா சன்முகராஜ் இப்படி பலர்...ஆங் மறக்க பார்த்தேன்ல ரகுவரன்...டாக்டரா வர்றார்...முதல்வன் ல

பார்த்த ரகுவரன இதுல பத்தோடு பதினொன்னா காட்டினது கொஞ்சம் வருத்தம் தான்.பராவாயில்ல ரஜினி படத்தில இருக்கும் போது வேற யாருக்கும் வேலை இருக்காதுல.

ரஜினி, இளமையான ரஜினி, அழகான ரஜினியா வலம் வர்றார். இடைவேளைக்கு அப்புறம் வரும் மொட்டை ரஜினி அசத்தல். ஒரு பாட்டுல ரஜினி ச்சும்மா வெள்ளைக்கார துரையாட்டம் வர்றார் பாருங்க...வாழ்க கிராப்பிக்ஸ்...எதோ INNOVATIVE CGI வொர்க்காம். மொட்டை ரஜினியிடம் நீங்க சிவாஜியான்னு நிருபர்கள் கேக்க இல்ல நான் MGR சொல்லும் போது தியேட்டர்ல விசில் பறக்குதுங்க. கிளைமேக்ஸ் சண்டை பட்டய கெளப்புது. பீட்டர் ஹெயினின் உழைப்பு தெரிகிறது. ரஜினி இந்த சண்டைக்காக மெனக்கெட்டிருக்கிறார். ரஜினி யோட Chewing Gum Style - அத ரசிக்க முடியல ஏன்னா அதுலயும் கிராபிக்ஸ்.

ஷங்கர் 1 1/2 வருஷமா சிவாஜி இப்ப வந்துருவார்னு அப்ப வந்துருவார்னு சொல்லிட்டு கடைசியில கொண்டு வந்துட்டார். பணத்தை கொட்டி கொடுக்க ஏவிஎம், யூத்புல் பாட்டு கொடுக்க ஏஆர் ரகுமான், மெகா பலம் ரஜினி இப்படி ஒரு டீம் அ வச்சிக்கிட்டு ச்சும்மா பட்டைய கெளப்பியிருக்க வேண்டாமா. திரைக்கதை Strong அ இல்ல..உதாரணமா சிவாஜி பாதி தன்ணோட கறுப்பு பணத்த அடிச்சப்பறம் ஆதி ஒன்னுமே செய்யாம இருக்கிறது, First Half அ எப்படி கொண்டு போறதுண்ணு தெரியாம காட்சி இடைச்சொருகல்கள இப்படி சொல்லிட்டே போலாம். ஷங்கருக்கு ஒரு சபாஷ் சொல்லனும்னா, ரஜினிய இப்படி இளமைய காட்டிணதுக்கு வேனா சொல்லிக்கலாம். மக்கள்கிட்ட விழிப்புணர்வு கொண்டு வர்ற கதைக்கரு நல்லாதான் இருக்கு ஆனா அதே சமயத்தில LAPTOP On பன்னினதும் ஒரு எலி வந்து VOICE RECOGNIZE பன்றது எல்லாம் ரொம்ப TOO MUCH. தேவையில்லாத சீன்ஸ் அ குறைத்திருக்கலாம் உதாரணமா LAPTOP பாஸ்வேர்ட பிரேக் பன்ன மிமிக்கிரி பன்றதெல்லாம் டைம் வேஸ்ட். பிரம்மாண்டமா பன்றேன்னு பாட்டுக்கும் பைட்டுக்கும் காச கொட்டி இருக்காங்க. ஷங்கர் ரொமான்ஸ்ஸ எப்ப கவித்துவமா சொல்லுவீங்க.

சுஜாதாவும் இருக்கிறார். தோட்டாதரணியின் செட் முக்கியமா கண்ணாடி செட் சூப்பர்.

ஏஆர் ரகுமான் இசையில் சஹானா சஹானா, ஒரு கூடை, பல்லேலக்கா, வாஜி வாஜி பாடல்கள் கேட்கும்படி பார்க்கும்படியும் உள்ளது. ஓளிப்பதிவு கேவி ஆனந்த் படம் பேசுகிறது அவரோட திறமைய.

அப்பாடா ஒரு வழியா படம் வந்திருச்சு, இன்னும் ஒரு மாசம் எந்த பத்திரிகைய தொறந்தாலும் சிவாஜிய பத்தி தான் நியூஸ். ஷங்கர் எதாவது டீவியில ரஜினி ரொம்ப சூப்பர்ன்னு பேட்டி கொடுப்பார். படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி ன்னு ஏவிஎம் சொல்லும். இதை யெல்லாம் விட எத்தனை கறுப்பு பணம் வெள்ளையாக்கபட்டிருக்கும் என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.

ஷங்கர் இந்த படத்த எடுக்கறதுக்கா இவ்வளவு நாளு...ஷங்கருக்கு AS A DIRECTOR - ஆ BETTER LUCK NEXT TIME. BATCHA க்கு அப்புறம் னு ஒரு நல்ல படம்ன்னு சொல்றாங்க பார்த்தா அப்படி தெரியல...BATCHA BATCHA தான்...சிவாஜி அத BEAT பன்னுங்கிறது ஒரு HYPE கொடுக்குமே தவிர RECORD லாம் பன்னாது.

புதுசா ஒன்னும் இல்லைனாலும் பழைய ரஜினிய பார்க்கிற அனுபவமே சிவாஜியின் வெற்றிக்கு வழிவகுக்கும். ரஜினிய போய் பார்த்துட்டு வரலாம்ங்க. சிம்ப்ளி ரஜினி பிலிம் னு சொல்லலாம்..

ஆனா என்ன சொன்னாலும் சரிங்க ச்சும்மா பேரக் கேட்டதும் அதிருதுல்ல... அதாங்க சிவாஜி